ஒடிசாவில் நீதிபதிகள் தேர்வு ஒருவர் கூட 'பாஸ்' ஆகவில்லை

கட்டாக் :ஒடிசா மாநிலத்தில், 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வுகளில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
ஒடிசா மாநிலத்தில் உள்ள, 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய, அந்த மாநில உயர் நீதிமன்றம், இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், ஒரு அறிவிப்பின் படி, பார் கவுன்சிலில் இருந்து நேரடி நியமனம் வாயிலாக, 31 பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன.
இன்னொரு முறையான, நேரடி போட்டி தேர்வுகள் வாயிலாக, 14 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன.
தேர்வு முடிவுகளை, கட்டாக் நகரில் உள்ள ஒடிசா உயர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டது.
அதில், இரண்டு விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில், 366 பேர் பங்கேற்றும், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பார் கவுன்சில்களில் இருந்து தேர்வு செய்யப்பட இருந்த போட்டியாளர்களுக்கு, மூன்று கேள்வி தாள்கள் இருந்தன; 283 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் தலா, 45 மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்பது உட்பட, மூன்று நிபந்தனைகள் இருந்தன. ஆனால், அந்த தேர்விலும், யாரும் வெற்றி பெறவில்லை.
அதுபோல, 14 பணியிடங்களை நிரப்ப, 83 நேரடி எழுத்து தேர்வு போட்டியாளர்கள் பங்கேற்றனர். தலா, 75 மதிப்பெண் கொண்ட இரண்டு தாள்களிலும், குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்களை கூட யாரும் பெறவில்லை.
இதையடுத்து, மாதம் 1.44 லட்சம் முதல் 1.94 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் அந்த பதவிகளுக்கு, இரண்டாவது முறையாக போட்டிகளை நடத்துவதா அல்லது வெற்றி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்ச்சி சதவீத அளவை குறைப்பதா என, அந்த மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசித்து வருகின்றனர்.
