போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்

ரோம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படுபவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படும் போப் பிரான்சிஸ், 88; ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோம், வாடிகன் நகரில் வசித்து வருகிறார்.
பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூச்சுக்குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்னை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிமோனியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் போப் ஆண்டவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'புனித தந்தை சுய நினைவுடன் இருந்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
'மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை முறையில் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. ரத்த அணுக்கள் குறைந்து வருவதால், அதற்கான சிகிச்சையும் தரப்படுகிறது. அதிக வலியை அவர் அனுபவித்து வருகிறார்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.