பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் தடகளத்தில் 'சாம்பியன்'

சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், ஆறாவது மாநில அளவிலான யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், இரண்டு நாட்கள் நடந்தன.

போட்டி, 18, 20 மற்றும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கு மட்டுமே நடத்தப்பட்டன.

இதில், 100, 200, 1,500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள், ஆண்களுக்கு 59 வகையிலும், பெண்களுக்கு 57 வகையிலும் தனித்தனியாக நடத்தப்பட்டன.

மாநில முழுதும் இருந்து, 1,200 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி, பல்வேறு சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்தனர்.

அனைத்து போட்டிகளின் முடிவில், இருபாலரிலும், ஒட்டுமொத்தமாக 565 புள்ளிகளை பெற்ற, பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடத்தை பிடித்து, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது.

இரண்டாம் இடத்தை, 257 புள்ளிகள் பெற்ற, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி, 'ரன்னர் அப்' கோப்பையை வென்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, காஞ்சிபுரம் தடகள சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் பாண்டியன், மாநில தடகள சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், செயலர் லதா பரிசுகளை வழங்கினர்.

Advertisement