'கோஹினுார் வைரம்' கோலி * சித்து பாராட்டு

புதுடில்லி: ''கோஹினுார் வைரம் போல ஜொலிக்கிறார் கோலி. இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் விளையாடி 10 முதல் 15 சதம் வரை அடிக்கலாம்,'' என நவ்ஜோத் சிங் சித்து பாராட்டினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய லீக் போட்டி துபாயில் நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார் இந்திய வீரர் கோலி.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியது:
நெருக்கடியான நேரத்தில் தான் சிறந்த வீரரின் திறமை வெளிப்படும். கோலியை பொறுத்தவரையில் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் விளையாடுகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த இவர், இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை விளையாடலாம். குறைந்தபட்சம் 10 முதல் 15 சதம் வரை கோலி கூடுதலாக அடிக்கலாம்.
மறக்க மாட்டர்
பொதுவாக ஒவ்வொருவரும் தங்களது சோதனை காலத்தில், கடின சூழலை எப்படி கடந்து செல்கின்றனர், துன்பங்களை எப்படி ஏற்றுக் கொள்கின்றனர் என்பதில் வெற்றி அடங்கியுள்ளது.
இதுபோன்ற நேரத்தில் கோலி சிறப்பாக செயல்படுகிறார். கடந்த ஆறு மாதமாக கோலியை சுற்றி நிறைய விஷங்கள் நடந்தன. பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரை மக்கள், அடுத்த 10 ஆண்டுக்கு மறக்க மாட்டர்.
இப்போட்டியில் இவரது 'ஷாட்' ஒவ்வொன்றும் பழைய கோலியை நினைவுக்கு கொண்டு வந்தன. நெருக்கடியான சூழலில் அவரது உண்மையான திறமை வெளிப்பட்டுள்ளது. இவர்கள் தான் தெருக்களில் விளையாடும் சிறுவர்களை ஊக்கப்படுத்துகின்றனர். ஒரு விளையாட்டு வளர வேண்டும் என்றால் சிறந்த 'ரோல் மாடல்' தேவை. அவர்கள் தான் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்வர். கோலி, கோஹினுார் வைரமாக ஜொலிக்கிறார். எவ்வித நெருக்கடியும் தன்னை பாதித்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலவீனம் டூ பலம்
கோலியின் ஸ்பெஷல் அவரது 'கவர் டிரைவ் ஷாட்' தான். இது பற்றி கோலி கூறுகையில்,''கவர் டிரைவ் ஷாட்' மூலம் அதிக ரன் எடுத்துள்ளேன். இதுவே எனது பலவீனமாகவும் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக துவக்கத்தில் இரண்டு பவுண்டரிகள் 'கவர் டிரைவ் ஷாட்' மூலம் அடித்தேன். பின் 'ரிஸ்க்' எடுத்து இதே போன்று 'ஷாட்' அடித்த போது, ஆட்டம் எனது கட்டுப்பாட்டில் வந்ததை உணர்ந்தேன்.
களத்தில் நுாறு சதவீத கடின உழைப்பை வெளிப்படுத்துவதே எனது பணி. 'மிடில் ஓவரில்' பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சை விளாசுவது, 'ஸ்பின்னர்'களுக்கு எதிராக அடக்கி வாசிப்பதே திட்டம். ஸ்ரேயாஸ் ஒரு கட்டத்தில் ரன் வேகத்தை அதிகரிக்க, நானும் பவுண்டரிகள் விளாசினேன். ஒருநாள் போட்டிக்கு ஏற்ப சிறப்பாக விளையாடினோம். தனிப்பட்ட முறையிலும் அணிக்காகவும் சிறந்த இன்னிங்சாக அமைந்தது. சதம் விளாசி, இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது மகிழ்ச்சி அளித்தது,''என்றார்.
ரிஸ்வான் பாராட்டு
பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கூறுகையில்,''கோலி 'பார்ம்' இல்லாமல் தவிப்பதாக உலகமே விமர்சித்தது. ஆனால், முக்கிய போட்டியில் அனாயசமாக சதம் விளாசி, ஆட்ட நாயகனாக முத்திரை பதித்தார். இவரை அவுட்டாக்க பல முறை முயற்சித்தோம். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதற்கு இவரது கடின உழைப்பே காரணம். இவரது சிறப்பான உடற்தகுதி, கடின உழைப்பை பாராட்டுகிறேன்,''என்றார்.
41 ரன்னில் 'எஸ்கேப்'
பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் வீசிய 21வது ஓவரின் 5வது பந்தை அடித்த கோலி ஒரு ரன்னுக்கு ஓடினார். அப்போது 'பீல்டர்' வீசிய பந்து கோலி அருகே வந்தது. 'கிரீசை' கடந்து விட்ட இவர், வலது கையால் பந்தை தடுத்து நிறுத்தினார். கிரிக்கெட் விதிமுறைப்படி பந்தை கையால் தடுப்பது தவறு. இதற்கு 'பீல்டிங்கிற்கு இடையூறு' செய்ததாக கூறி அவுட் கொடுக்கலாம். பாகிஸ்தான் வீரர்கள் கண்டுகொள்ளாததால், அப்போது 41 ரன் எடுத்திருந்த கோலி தப்பினார். பின் சதம் விளாசினார்.
இது பற்றி வர்ணனை செய்த இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''பீல்டர் எறிந்த பந்தை பிடிக்க யாருமில்லை. 'மிட் விக்கெட்' திசையில் நின்ற பாபர் ஆசம் 'டைவ்' அடித்து தடுத்திருக்கலாம். கையால் பந்தை தடுக்க வேண்டிய அவசியம் கோலிக்கு இல்லை. ஒருவேளை தடுக்காமல் இருந்திருந்தால் ஒரு ரன் கூடுதலாக கிடைத்திருக்கும். பாகிஸ்தான் வீரர்கள் 'அப்பீல்' செய்யாததால் அதிர்ஷ்டவசமாக அவுட்டாகாமல் தப்பினார்,''என்றார்.
'நெருப்பு' ஆட்டம் எங்கே...
சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் பிரபலங்கள் வறுத்தெடுக்கின்றனர்.
மியாண்தத்: பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை குறை சொல்வதால் பயன் இல்லை. வீரர்களுக்கு என்ன குறை வைத்தனர். அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கவில்லையா...அவர்களது ஆட்டம் தான் எடுபடவில்லை. பெரிய போட்டிகளில் 'நெருப்பாக' விளையாட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டி துவங்கும் முன்பே பதட்டமாக இருந்தனர். இதை வீரர்களின் உடல் அசைவு உணர்த்தியது. கோலியை பாருங்கள்...இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார்.
சோயப் அக்தர்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றதால், எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. என்ன நடக்கும் என எனக்குத் தெரியும். ஒவ்வொரு அணியும் 6 பவுலர்களுடன் விளையாடுகிறது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திடம் எவ்வித திட்டமிடலும் இல்லை. ஐந்து பவுலர்களை கூட தேர்வு செய்யவில்லை. 2 ஆல் ரவுண்டருடன் களமிறங்குகின்றனர்.
தோல்விக்காக வீரர்களை குற்றம் சொல்லி பயனில்லை. தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் களமிறங்கினர். கோலி ஒரு சூப்பர் ஸ்டார். நவீன கிரிக்கெட்டில் 'சேஸிங்' செய்வதில் வல்லவர். சதத்தில் சதம் விளாசுவார்.
முகமது ஹபீஸ்: ஷாகீன் ஷா அப்ரிதி, ஹாரிஸ் ராப், நசீம் ஷாவை நீக்க வேண்டும்.
மேலும்
-
பாரதி பயிலகம் சார்பில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி
-
உதவி டாக்டர்கள் நியமனத்தில் இறுதி தீர்ப்பு உண்டு: உயர் நீதிமன்றம்
-
பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு
-
ஓடும் ரயிலில் நகை திருடிய போலீஸ்; 'டிவி' நடிகை வாக்குமூலம்
-
புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி; 2,000 பழைய பெர்மிட்தாரர்கள் கோரிக்கை
-
பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை