பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு
சென்னை : பெண் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே போலீஸ் நிலையங்களில், உள்ளூர் பெண் பயணியரை இணைத்து, பெண் பயணியர் பாதுகாப்பு குழு அமைக்க, ரயில்வே போலீசார் திட்டமிட்டுஉள்ளனர்.
கோவை -- திருப்பதி விரைவு ரயிலில், மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை, மர்ம நபர் கீழே தள்ளிவிட்ட சம்பவம்; பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீசிடம் நடந்த செயின் பறிப்பு, பெண் பயணியர் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைடுத்து, பெண் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு பிறகு புறப்படும் ரயில்களில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மின்சார ரயில் வழித்தடங்களில் உள்ள, அனைத்து ரயில் நிலையங்களில், நடைமேடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நகர போலீசாரிடம் இருந்து, 300 போலீசார் பெறப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இது தவிர, வழக்கமாக ரயில்களில் பயணிக்கும் பெண் பயணியர் கொண்ட ஒரு குழுவை மைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, வழக்கமாக பயணிக்கும் பெண் பயணியர் கொண்ட குழு, ரயில்வே போலீஸ் நிலையங்களில் உருவாக்கப்படும்.
இதற்கு முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இறுதி செய்த பிறகு, தமிழக காவல்துறை அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.