பாரதி பயிலகம் சார்பில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி

சென்னை: 'சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐ.ஏ.எஸ்., அகாடமி' சார்பில், இலவச பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, அகாடமியின் இயக்குநர் உ.தன்ராஜ் வெளியிட்ட அறிவிப்பு:

சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய குடும்பத்தினருக்கு, அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, 2020ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

இதில், 2022ம் ஆண்டு முதல், உண்டு, உறைவிடத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, 1600 பேர் விண்ணப்பித்து, எழுத்து தேர்வை எழுதினர். நேர்முகத் தேர்வில், 63 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றனர்.

கடந்த இரண்டு ஆண்டு களில், பயிற்சி மையத்தில் படித்த, ராமநாதன், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். தமிழக அரசின் குரூப் 1 பணிகளில் ஐந்து மாணவர்கள்; குரூப் 2 பணிகளில் 12 மாணவர்கள்; மத்திய அரசின் உளவுப்பணியில், ஒரு மாணவர் என சேர்ந்துள்ளனர்.அதில் ஒருவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. வரும், 2025 - 26ம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஏப்., 18ம் தேதி துவங்க உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, சென்னை அண்ணா நகரில் உள்ள சேவா பாரதியின், 'பாரதி பயிலகம்' யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச உண்டு உறைவிட பயிற்சியை அளிக்கிறது.

சிறப்பு நிபுணர்கள் நேரடி பயிற்சி, உணவு மற்றும் உறைவிடம், தரமான நுாலகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு படிப்பவர்கள் என, இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு தனி விடுதி வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 25ம் தேதிக்குள், www.bharathipayilagam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு, 90032 42208 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement