பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை

சென்னை : சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் மீது, சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துஉள்ளனர்.
கடந்தாண்டு, டிசம்பர், 23ம் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் கைதான ஞானசேகரனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ஞானசேகரனின் வீட்டில் சோதனை நடத்தி, மடிக்கணினி உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஞானசேகரனின் மூன்று மனைவியரிடமும் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதன் அடிப்படையில், 'ஆன்லைன்' வாயிலாக, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்கள், கைப்பற்றிய ஆவணங்கள், வாக்குமூலம், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்த ஆபாச வீடியோக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுஉள்ளன.
இதற்கிடையே, சென்னை பள்ளிக்கரணை பகுதியில், ஏழு வீடுகளில் நகை பணம் திருடியது தொடர்பாக, ஞானசேகரனை போலீசார் கைது செய்து, மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவரிடம் இருந்து, 100 சவரன் நகையையும் பறிமுதல் செய்துஉள்ளனர்.
திருடிய நகைகளை விற்று, 'மஹிந்திரா தார்' ஜீப் வாங்கியதும், 30 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துஉள்ளது.
காவல் விசாரணை முடிந்து, மருத்துவ பரிசோதனைக்கு பின், ஞானசேகரனை நேற்று ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மார்ச், 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்ததாக, நீலாங்கரை, கானத்துார் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய வழக்குளிலும் ஞானசேகரன் கைது செய்யப்பட உள்ளார்.