12 ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணி ஜவ்வு! கழிவுநீர் பிரச்னையால் ஸ்ரீபெரும்புதுார் மக்கள் தவிப்பு

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியாக இருந்து, தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதுாரில், கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தில், பல இடங்களில் குழாய்கள் உடைந்தும், இணைப்பு இல்லாமலும் உள்ளதால், திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தொழில் நகரமாகவும், ஆன்மிக தலமாகவும் உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றி இருங்காட்டுக்கோட்டை, வல்லம் -- வடகால், பிள்ளைப்பாக்கம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் என, ஐந்து சிப்காட் தொழிற்சாலையில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
வருவாய் மற்றும் சுற்றுலா தலங்கள் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக, கடந்த 5ம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, 2013 ஆக., மாதம் மத்திய அரசின் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின்படி, 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது.
வரும் 2042ம் ஆண்டு மக்கள்தொகை எவ்வாறு இருக்கும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப தொலைநோக்கு பார்வையுடன் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டு, 2016ம் ஆண்டு பணி நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டது.
ஆனால், 12 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை முழுமையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. இத்திட்டம் துவக்கப்பட்டபோது இருந்த மக்கள் தொகையைவிட, தற்போது 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிர, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
தற்போது, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் முழுமையடைந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகின்றன.
சேதம்
மூலதன மான்ய திட்டத்தின் கீழ், 2023 -- 2024ம் நிதியாண்டில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்க பேரூராட்சி இயக்குனரகம் அனுமதி வழங்கியது. ஆனால், 2013ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்ட போது அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய் மற்றும் 'மேன்ஹோல்' தற்போது பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இதனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு, குழாய் வாயிலாக வெளியேறும் கழிவுநீர், முறையாக செல்ல வழியின்றி 'மேன்ஹோல்' வழியாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திட்டம் முழுமையடைந்து செயல்பாட்டுக்கு வருமா என, ஸ்ரீபெரும்புதுார் நகரவாசிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.
பேரூராட்சியாக இருந்து சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரி கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்டத்தில், குழாய் பதிக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று, தற்போது வீடுகளுக்கு இணைப்பு வழக்கப்பட்டு வருகிறது.
தாமதம்
பணிகள் துவங்கப்பட்ட போது நடந்த பணிகள் நிறைவு பெற்று, 10 ஆண்டுகளாகி விட்டது. இதனால், பல இடங்களில் பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்து உள்ளது.
வீடுகளுக்கு இணைப்பு வழங்கி, கழிவுநீர் வெளியேறும் போதுதான், அப்பிரச்னை அடையாளம் காணப்படும். இதனால், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
கழிவுநீர் வெளியேறும் இடங்களை, சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் உடனடியாக சீரமைத்து வருகின்றனர். தற்போது, 2,180 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இணைப்புகள் கொடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதாள சாக்கடை குழாயில் ஏற்படும் அடைப்பை உடனடியாக சரிசெய்ய, நகராட்சி சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 'டிசெல்டிங் மிஷின்' மற்றும் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் 'ஜெட்ராடிங்' வாகனம் வாங்கப்பட உள்ளது.
மேலும்
-
ஜெ., பிறந்த நாள்: முதல்வர் மரியாதை
-
லாஸ்பேட்டை மைதானத்தில் மரக்கன்று நடும் பணி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு
-
கணக்காளர் வரையறையில் காஸ்ட் அக்கவுண்டன்டை சேர்க்க கோரிக்கை
-
மேம்பாலத்தில் சென்டர் மீடியன் உடைப்பு வாகன ஓட்டிகள் திக்.. திக்...
-
புதுச்சேரி காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்
-
பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு