புதுச்சேரி காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறை சார்பில், மக்கள் மன்றம் துவக்க விழா, புதுச்சேரி போலீஸ் பாடல் அறிமுகம், பள்ளிகளில் போலீஸ் புகார் பெட்டி அமைப்பு, சூப்பர் காவலர்களை கவுரவித்தல், போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்குவது உள்ளிட்ட விழா நடந்தது.

கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர், மக்கள் மன்றத்தை துவக்கி வைத்து, போலீஸ் பாடலை அறிமுகப்படுத்தினர். ரமேஷ் எம்.எல்.ஏ., டி.ஜி.பி., ஷாலினிசிங் முன்னிலை வகித்தனர். சீனியர் எஸ்.பி., கலைவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் மன்றம்



புதுச்சேரி போலீஸ் சார்பில் வாரந்தோறும், சனிக்கிழமை போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்கும் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது. இது மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், மக்கள் மன்றம் நடக்கும்.

ஐ.எஸ்.ஓ., தரச்சான்று



புதுச்சேரியில் முதல் முறையாக காவல் துறை ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ் பெற்றுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., அலுவலகம், ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம், நெட்டபாக்கம், பாகூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு, விழாவில் ஐ.எஸ்.ஓ., 9001:2015 தரச்சான்று வழங்கப்பட்டது.

சிறந்த காவலர் விருது



குற்ற தடுப்பு மற்றும் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட பாகூர் கான்ஸ்டபிள்கள் கலைச்செல்வன், தேவதாஸ், மேற்கு கிரைம் ஏட்டு ராஜரத்தினம், திருபுவனை அசோகன், ஒதியஞ்சாலை உதவி சப்இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், வீரமணி, மாகே கிஷோர்குமார், ஸ்ரீஜித், வடக்கு கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ராஜி, கோரிமேடு கிரைம் ஏட்டு ராஜசேகர், ஏனாம் பாலவெங்கட்ட சுப்பாராவ், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹரனாத், டி.ஆர்.பட்டினம் ஏட்டு கமல், திருநள்ளார் கதிரவன், காரைக்கால் இளவரசன், கோட்டுச்சேரி ஆரோக்கியமேரி, எஸ்.டி.எப்., முரளி, பிரபாகரன், சி.பி.சி.ஐ.டி., ஏட்டு இளந்தமிழ், ஜெயந்தி, சைபர் கிரைம் ஜெலாலுதீன், பாலாஜி ஆகியோருக்கு, சூப்பர் கார்ப் விருது வழங்கப்பட்டது.

போலீஸ் புகார் பெட்டி



குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி முழுதும் உள்ள 10 பள்ளிகளுக்கு, போலீஸ் புகார் பெட்டிகள் வழங்கப்பட்டது.

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளது.

போலீஸ் பாடல் அறிமுகம்



புதுச்சேரி போலீஸ் துறையின் வரலாறு, மரபு மற்றும் பணி பக்தியை பிரதிபலிக்கும் வகையில், புதுச்சேரி போலீஸ் பாடல், நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நன்றி கூறினார். சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, அனிதாராய், எஸ்.பி.க்கள் வீரவல்லபன், பாஸ்கர், ரங்கநாதன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement