அடுத்த சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் தோற்றவர்களுடன் சிவகுமார் ஆலோசனை

பெங்களூரு: அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, காங்கிரஸ் இப்போது இருந்தே தயாராக ஆரம்பித்து உள்ளது. கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தோற்றவர்களுடன், துணை முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2023ம் ஆண்டு தேர்தல் நடந்தது. துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. தங்கள் கட்சி 145 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று, கட்சியின் தலைவர் சிவகுமார் கூறினார். ஆனால் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தனர்.
இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுடன், பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், சிவகுமார் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கட்சியின் பிரசார குழு தலைவர் வினய்குமார் சொரகே, செயல் தலைவர்கள் சந்திரசேகர், வசந்த்குமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பு செயலர் மயூரா ஜெயகுமார், கோபிநாத் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
60 இடங்களில் வெற்றி
கூட்டத்தில் சிவகுமார் பேசுகையில், ''கடந்த சட்டசபை தேர்தலில் நாம் தோல்வி அடைந்த 60 இடங்களில், வரும் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் நீங்கள், இப்போது இருந்தே தேர்தல் பணியாற்ற துவங்குங்கள். மக்களை சந்தித்து பேசுங்கள். வீட்டில் சும்மா அமர்ந்திருக்க வேண்டாம்,'' என்று கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின், சிவகுமார் அளித்த பேட்டி:
கடந்த சட்டசபை தேர்தலில் தோற்றவர்களை அழைத்து, அவர்களின் குறைகளை கேட்டு உள்ளேன். அடுத்த தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தி உள்ளேன். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுடன், இன்னொரு நாள் ஆலோசனை செய்வேன்.
மார்ச் 23 ம் தேதி முதல் ஏப்ரல் 1 ம் தேதி வரை முதல்வர், அனைத்து அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று தொண்டர்களை சந்திக்க வேண்டும்.
அடிக்கல் நாட்டு வி ழா
நான், பெங்களூரில் தினமும் இரண்டு, மூன்று தொகுதிகளை சென்று தொண்டர்களை சந்திக்கிறேன். பெலகாவியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் மறுசீரமைப்பில் கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஒரே பொறுப்பில் இருப்பவர் வேறு பதவிக்கு நியமிக்கப்படுவார்.
மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், புதிய காங்கிரஸ் அலுவலகங்கள் அடிக்கல் நாட்டு விழா இருக்கும். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரை அழைப்பேன்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் கட்சி அலுவலகம் இருக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். கட்சியை வலுப்படுத்துவது குறித்து சுனில் கனகோலுவின் ஆலோசனையை நாங்கள் பரிசீலிப்பது பற்றி, தேசிய அளவில் முடிவு எடுக்கப்படும்.
கட்சிக்கு நல்ல ஆலோசனை என்றால் நாங்களும் ஏற்றுக்கொள்வோம். மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்திக்க, இன்று டில்லி செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.