பெலகாவியில் கன்னடர்களுக்கு பாதுகாப்பு இல்லை: குமாரசாமி குற்றச்சாட்டு

மைசூரு: பெலகாவியில் வசிக்கும் கன்னடர்களுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை,'' என்று, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா மீதான முடா வழக்கில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். புகார்தாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் உண்மையை வெளிப்படுத்தின. ஆனால் முதல்வரின் வசதிக்கு ஏற்ப, லோக் ஆயுக்தா போலீசார் 'பி' அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசு தலையீடு இருந்தது. இதுபற்றி பிரச்னை எழுப்பியதால் நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம். மாநில வரலாற்றில் முதல்முறையாக நில முறைகேடு பற்றி விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சத்ய ஹரிசந்திரன்
நான் 40 ஆண்டுக்கு முன்பு, திரைப்பட தயாரிப்பாளராக இருந்த போது அந்த நிலத்தை வாங்கினேன். இப்போது 14 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக கூறுகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், நிலத்தை ஆய்வு செய்து மீட்டெடுக்கும்படி நான் அரசுக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தேன்.
எனது கடிதம் புறக்கணிக்கப்பட்டது. நான்கு தசாப்தங்களாக நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, அசல் ஆவணம் இல்லை என அரசு கூறுகிறது. ஆனாலும் எனது நிலத்தை சரி பார்க்கின்றனர். சித்தராமையா நவீன கால ஹரிசந்திரனா.
பெலகாவியில் பஸ் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியவில்லை. பெலகாவியில் கன்னடர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் 2006 ல் முதல்வராக இருந்த போது, பெலகாவியை மஹாராஷ்டிராவுடன் இணைக்கும் முயற்சி நடந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, பெலகாவியை நம் கையை விட்டு போகாமல் பார்த்து கொண்டேன். பெலகாவியில் சுவர்ண விதான் சவுதாவிற்கு அடிக்கல் நாட்டினேன்.
ஊழல் மையம்
காங்கிரஸ் அரசில் கண்ணியமான அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. ராஜினாமா செய்ய தயார் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி இருப்பதன் மூலம், இது நிரூபணம் ஆகி உள்ளது. இவர்கள் 135 இடத்தில் வெற்றி பெற்று என்ன பயன்.
முதல்வர் சாதனை படைப்பதாக அமைச்சர் மஹாதேவப்பா கூறுகிறார். எவ்வளவு காலம் ஆட்சி செய்தோம் என்பது முக்கியம் இல்லை. மக்களுக்கு என்ன செய்தோம் என்பது முக்கியம். ஒரு முறை 20 மாதங்கள் முதல்வராக இருந்து, ஆட்சி செய்தது மகிழ்ச்சி. ஐந்து வாக்குறுதி திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான பசவராஜ் சிவகங்கா, தனது வீட்டிற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை நடத்த யாரும் வரவில்லை என்று கூறி உள்ளார். அரசுக்கு தைரியம் இருந்தால் அறிக்கையை வெளியிடட்டும். பின், என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அறிக்கையை வாங்கி மேஜையில் வைத்து கொண்டு முதல்வர் என்ன செய்கிறார். அவரை தடுப்பது யார்.
கர்நாடக பொது சேவை ஆணையத்தை, காங்கிரஸ் அரசு சீர்குலைத்துவிட்டது. ஒரு பெண்ணுக்கு சாதகமாக 370 பேரின் எதிர்காலத்தை அழித்துவிட்டனர். அந்த ஆணையம் ஊழல் மையமாக மாறிவிட்டது. மைசூரு உதயகிரியில் கல்வீசியவர்களை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது. அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.