தொல்பொருள் துறையில் பொருளாதார ஒழுங்கின்மை
பெங்களூரு: தொல்பொருள் துறையில், பொருளாதார ஒழுங்கின்மை நிலவுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் பெற வாய்ப்பிருந்தும், அதை பயன்படுத்துவதில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
கர்நாடக தொல் பொருள் துறை நிதி நிலைமை குறித்து, மத்திய கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளார்.
இதில் துறையில் பொருளாதார ஒழுங்கின்மை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தொல் பொருள் துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் பெற, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.இந்த வாய்ப்புகளை அதிகாரிகள் சரியாக பயன்படுத்தி, வருவாயை அதிக ரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்க்கிங் கட்டணம்
அரசின் நினைவிடங்கள், அருங்காட்சியகங்களில் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் பெங்களூரின் அருங்காட்சியகத்திற்குள் செல்வதற்கு மட்டுமே கட்டணம், பார்க்கிங் கட்ட ணம் வசூலிக்கின்றனர்.
மங்களூரின் அருங்காட்சி யகத்தில் பார்க்கிங் கட்ட ணத்தை தவிர, வேறு எந்தவகையிலும்வருவாய் கிடைப்பது இல்லை. இதன்விளைவாக தொல் பொருள் துறைக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அருங்காட்சியகங்களில் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் விதித்து, துறை சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. எனவே அனைத்து செலவுகளுக்கும், அரசின் நிதியுதவியை துறை நம்பியுள்ளது.
சுற்றுலாத்துறை போன்று, தொல் பொருள் துறையும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் விதிக்க வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புராதன இடங்களை கண்டுபிடிப்பதும், பாதுகாப்பதும் தொல் பொருள் துறையின் முக்கிய பொறுப்பாகும்.
துறைக்கு வழங்கப்படும் நிதியுதவியில், 28.17 சதவீதம் தொகை அன்றாட நிர்வகிப்புக்கு செலவிடப்படுகிறது. இதனால் நினைவிடங்கள், புராதன இடங்களை பாதுகாக்க துறையில் பணம் இல்லை.
ரூ.39 லட்சம்
கடந்த ஐந்து ஆண்டுகளில், புராதன நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் நிர்வகிப்புக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி 39 லட்சம் ரூபாய் மட்டுமே. புராதன நினைவிடங்களை பாதுகாப்பது குறித்து, மாநிலத்தில் சரியான விதிமுறை இல்லாததே, பிரச்னைக்கு காரணம்.
தொல் பொருள் துறையில் பயன்படுத்தாமல், மிச்சமான நிதியை, அரசிடம் திருப்பி கொடுக்காமல், அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது விதிமுறை மீறலாகும்.
2012ல் மிச்சமான நிதியை, 2019 வரை பயன்படுத்தவில்லை என்பது, தணிக்கையில் தெரிந்தது.
தொல் பொருள் துறையில் பொருளாதார ஒழுங்கு அவசியம் என, அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.