இரும்பு தொழிற்சாலை துவங்க எதிர்ப்பு கொப்பாலில் முழு அடைப்பு போராட்டம் 

கொப்பால்: இரும்பு தொழிற்சாலை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, கொப்பாலில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கொப்பால் ஹலவர்த்தியில் உள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளியாகும் கழிவுகள், துாசிகளால் ஹலவர்த்தி, அல்லாநகர், சிக்கபனகல், ஹிரேபனகல், கசனகண்டி கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எதிர்ப்பு



இந்நிலையில் தொழிற்பேட்டைக்குள் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 13 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட, இரும்பு தொழிற்சாலையை பால்டோட்டா என்ற நிறுவனம் கட்டி வருகிறது. ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த இரும்பு தொழிற்சாலையும் அமைந்தால் புகை, துாசியால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களும் சேதம் அடையும் என்று மக்கள் கூறினர். இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கொப்பால் நகர முழு அடைப்புக்கு, பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி நேற்று கொப்பால் டவுனில் முழு அடைப்பு நடந்தது. கவி மடத்தின் வளாகத்தில் இருந்து, மாவட்ட விளையாட்டு மைதானம் வரை 3 கி.மீ., துாரத்திற்கு பிரமாண்ட பேரணி நடந்தது.

ஆதரவு



இந்த பேரணியை மடாதிபதி அபிநவ கவிசித்தேஸ்வர சுவாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கட்சி, ஜாதி, மதம் பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டனர். 150 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு கொடுத்தன.

முழு அடைப்பு வெற்றி பெற்றது. நேற்று காலை முதல் கொப்பால் நகரில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, வாடகை கார்களும் ஓடவில்லை. பள்ளி, கல்லுாரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளித்து, தாலுகா கல்வி அதிகாரி உத்தரவிட்டு இருந்தார். நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த போராட்டத்தில் மடாதிபதி அபிநவ கவிசித்தேஸ்வர சுவாமி பேசுகையில், ''தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் துாசிகள், அரசு பள்ளிகள், வீடுகளில் சமைக்கப்படும் உணவுகள் மீதும் விழுகிறது. நகர மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீண்டும் ஒரு தொழிற்சாலை அமைத்தால், மக்கள் நிலைமை என்ன.

''விவசாய நிலத்தை தரிசாக மாற்ற போகின்றனர். தற்போதைய சுற்றுச்சூழல் காரணமாக, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் இரும்பு தொழிற்சாலை வரவிடாமல் தடுக்க, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.

இந்த போராட்டத்தின் போது மக்கள் படும் கஷ்டத்தை கேட்டு, மடாதிபதி கண்ணீர் வடித்தார்.

Advertisement