தீயை கட்டுப்படுத்த 280 கிலோ மீட்டர் துாரம் தடுப்பு கோடுகள்

திண்டுக்கல்: கோடை காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனப்பகுதிகளில் 280 கிலோ மீட்டர் துாரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல், சிறுமலை, நத்தம், கன்னிவாடி, அழகர்கோவில், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனப்பகுதிகள் உள்ளன. கோடை காலத்தில் தானாக காட்டுத்தீ உருவாகி பல நுாறு கிலோ மீட்டர் துாரத்திற்கு வன நிலங்கள் தீயில் கருகுகின்றன.

இதில் வனவிலங்குகள், பறவைகள் என ஏராளமான உயிரினங்கள் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது. 2024ல் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டது.

தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் காட்டுத்தீயை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறை நிர்வாகம் 280 கிலோ மீட்டர் துாரத்திற்கு தீத்தடுப்பு கோடுகளை வரைந்துள்ளனர்.

இதன்மூலம் தீ மற்ற பகுதிகளில் பரவுவதை தடுக்கலாம் என மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தெரிவித்தார்.

Advertisement