ஆண்டுக்கு இரு முறை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

புதுடில்லி: ஆண்டுக்கு இரு முறை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் இந்த முறை குறித்து பொது மக்கள் கருத்து கூறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வாரியம் வெளியிட்ட அறி்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி தேர்வு தொடர்பாக சில பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடரும். தற்போதுள்ள தேர்வை எதிர்கொள்ள பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனை மாற்ற தேர்வு முறை சீரமைக்கப்படுகிறது. தற்போதுள்ள தேர்வு முறையில் குறைபாட்டை மாற்றவும், முழுமையான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் சி.பி.எஸ்.இ., வாரியத் தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

பல மாதங்கள் பயிற்சி அளித்து மனப்பாடம் செய்வதை விட முதன்மையாக திறன்கள் மற்றும் திறமைகளை சோதிக்கும் வகையில் தேர்வுகள் எளிமையாக்கப்படும். அனைத்து மாணவர்களும் எந்தவொரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால், மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை ' இம்ப்ரூவ்மென்ட் ' தேர்வையும் எழுதிக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

இதன்படி, பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்கட்டமாக பிப்., 17 முதல் மார்ச் 6 வரையிலும், இரண்டாம் கட்டமாக மே 5 முதல் 20 வரையிலும் பொதுத் தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ., திட்டமிட்டு உள்ளது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் வரும் மார்ச் 9ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Advertisement