ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * நெதர்லாந்தை வீழ்த்தியது

புவனேஸ்வர்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 2-1 என்ற கணக்கில் 'நடப்பு சாம்பியன்' நெதர்லாந்தை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024----25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஒலிம்பிக், உலக சாம்பியன் நெதர்லாந்து அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 17, 28 வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கேப்டன் பியன் சாண்டர்ஸ், வான் டர் பே தலா ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 0-2 என பின்தங்கியது.
இரண்டாவது பாதியில் போட்டியின் 35வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா, ஒரு பீல்டு கோல் அடித்தார். அடுத்த 8வது நிமிடம் பல்ஜீத் கவுர் (43) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இரு அணிகளுக்கும் தலா ஐந்து வாய்ப்பு தரப்பட்டன. முதல், மூன்றாவது வாய்ப்பில் தீபிகா, மும்தாஜ் கோல் அடித்தனர். பியூட்டி, பல்ஜீத் வாய்ப்புகளை வீணடித்தனர். நெதர்லாந்து சார்பில் மார்ஜீன் வின் மட்டும் ஒரு கோல் அடித்தார். மற்ற நான்கு வீராங்கனைகளும் ஏமாற்றினர். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 9 புள்ளி பெற்று, பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. நெதர்லாந்து (19), பெல்ஜியம் (17), சீனா (16) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.
ரூ. 1 லட்சம் பரிசு
பெண்கள் ஹாக்கியில் நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியன் நெதர்லாந்து அணி. புரோ லீக் தொடரிலும் நடப்பு சாம்பியனாக உள்ளது. நேற்றைய போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியதால், ஹாக்கி இந்தியா அமைப்பு, இந்திய வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு ரூ. 50,000 தரப்பட உள்ளது.