சாக்கு கிடங்கில் தீ விபத்து ரூ.3 கோடி பொருட்சேதம்

திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொல்லப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம், 58; சந்தைப்பேட்டையில் சாக்கு கிடங்கு நடத்தி வருகிறார். இந்த கிடங்கில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. சற்று நேரத்தில், மேல் பகுதியில் இருந்த ஓடுகள் வெடித்து சிதறின.
அக்கம் பக்கத்தினர், திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கும், பரமசிவத்திற்கும் தகவல் தெரிவித்தனர். திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்தது.
வெப்படை, குமாரபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள், திருச்செங்கோடு நகராட்சி மற்றும் தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 10 மணி நேரத்துக்கும் மேல் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான சாக்கு பைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
திருச்செங்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.