சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருப்போரூர், மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

அந்த வகையில், திருப்போரூர் பிரணவ மலையில் உள்ள பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கைலாசநாதருக்கும் பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர், கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று, பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

Advertisement