நீர்ப்பாசன திட்டங்களுக்கு விரைந்து அனுமதி

பெங்களூரு; ''கர்நாடகாவில் கிடப்பில் போடப்பட்டுள்ள, முக்கிய நீர்ப்பாசனதிட்டங்களை செயல்படுத்த, அனுமதி அளிக்க வேண்டும். பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசு பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்ட 5,300 கோடி ரூபாயை, விரைவில்வழங்க வேண்டும்,'' என மத்திய அமைச்சரிடம், மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தினார்.
டில்லி சென்றுள்ள சிவகுமார், நேற்று காலை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்தார்.
அப்போது மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா, கர்நாடக சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் போசராஜ், டில்லி சிறப்பு பிரதிநிதி ஜெயசந்திரா உடன் இருந்தனர்.
விரைவில் அனுமதி
மாநில நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து, மத்திய அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வேளையில் சிவகுமார்,முக்கியமான நீர்ப்பாசனதிட்டங்களுக்கு விரைவில் அனுமதிஅளிக்கும்படி வலியுறுத்தினார்.
மேகதாது திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேகதாதில் அணை கட்டுவதால், தமிழகத்தின் பங்கு நீரை வழங்குவதற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே மத்திய அரசு தலையிட்டு விவாதத்தை தீர்த்து வைக்க வேண்டும்.
கட்டபிரபா நீர்ப்பாசனத்தின் முக்கிய கால்வாய், சிக்கோடி கால்வாய்களை விஸ்தரித்து, தரம் உயர்த்துவது அவசியம். இது குறித்து, திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டங்களை செயல்படுத்தினால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இத்திட்டத்துக்கு 1,596.98 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.
வேண்டுகோள்
மத்திய அரசின் வெள்ள நிர்வகிப்பு மற்றும் எல்லை பகுதி திட்டத்தின் கீழ், பென்னஹள்ளாவில் இருந்து மல்லபிரபாவின் சங்கமா வரை வெள்ள பாதிப்பை தடுக்கும் பணிகள் நடத்த, 1,610 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். மல்லபிரபா கால்வாய் விஸ்தரிப்புக்கு, 3,000 கோடி ரூபாய் அவசியம். திட்டத்துக்கு அனுமதியுடன், நிதியுதவியும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பின், சிவகுமார் அளித்த பேட்டி:
மஹதாயி ஆற்றுக்கு குறுக்கே, கலசா - பண்டூரி அருகில் அணை கட்ட மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்ததும், பணிகள் துவங்கும்.
ராஜஸ்தானில் நடந்த ஜல்சக்தி மாநாட்டில், மாநில நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவரித்தேன். நீர்ப்பாசன விஷயத்தில் கர்நாடகாவுக்கு ஏற்படும்அநீதியை கூறினேன்.
மத்திய அரசு சில திட்டங்களுக்கு நிதியுதவி அறிவித்தும், நிதி வழங்கவில்லை. மேலும் சில திட்டங்களுக்குஅனுமதி அளிக்கவில்லை. இது குறித்து விவரித்த போது, மாநில நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக, விரைவில் தனி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக,மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.
மத்திய அமைச்சர் இன்று (நேற்று) காலை நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, எங்கள் துறை அதிகாரிகளை டில்லிக்கு அனுப்பினோம்.
பெலகாவியில் நடந்து வரும் பிரச்னைகளை, உள்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனிக்கின்றனர். அவர்களே அனைத்தையும் சரி செய்வர்.
இவ்வாறு அவர்கூறினார்.