கணவன், மனைவிக்கு 20 ஆண்டுகள் சிறை தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தேனி:சிறுமியுடன் கணவர் உல்லாசமாக இருந்தால் அவரது ஆயுள் கூடும் என கருதி 14 வயது சிறுமியை கடத்தி சென்று வீட்டில் கணவரையும் சிறுமியையும் பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில் தெரு மனைவி ராமலட்சுமி 25, அவரது கணவர் அழகுராஜா 32, ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் 56 வயது ஆட்டோ டிரைவர். அவரது 48 வயது மனைவி. இத்தம்பதிக்கு 14 வயது மகள் உள்ளார். அவர் 9ம் வகுப்பு படித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில் தெரு கூலி தொழிலாளி அழகுராஜா, அவரது மனைவி ராமலட்சுமி. ராமலட்சுமி ஜோசியம் பார்க்கும் பழக்கம் உண்டு.

கணவர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்தால் ஆயுள் கூடும் என ஜோசியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அவர் பெரியகுளம் முழுவதும் சிறுமிகளை கடத்த டூவீலரில் தேடினார். 2021 அக்.,25 வீடு அருகே விளையாடிய ஆட்டோ டிரைவர் மகளான 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி டூவீலரில் ஏற்றிச் சென்றார்.

பழைய வத்தலக்குண்டு ரைஸ்மில் தெரு பெருமாள் கோயில் அடிவாரத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியையும், கணவனையும் ஒரே அறையில் பூட்டினார். 14 வயது சிறுமியை அழகுராஜா பாலியல் பலாத்காரம் செய்தார்.

ஆட்டோ டிரைவர் புகாரில் டி.எஸ்.பி., சுகுமாறன், இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் 2021 அக்., 28ல் வழக்குப்பதிந்து சிறுமியை தேடினர். சிறுமியை மறுநாள் வீடு அருகே அழகுராஜா, ராமலட்சுமி டூவீலரில் இறக்கிவிட்டு தப்பினர்.

பிறகு போலீசார் விசாரித்து அழகுராஜா, ராமலட்சுமியை கைது செய்தனர். இவ்வழக்கில் 2021 டிச., 16ல் போக்சோ பிரிவு சேர்க்கப்பட்டது. தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். அழகுராஜா, ராமலட்சுமிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை, ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

Advertisement