மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர்நகரைச் சேர்ந்த சுதந்திர மணி மனைவி வீரமணி 47. சுதந்திரமணி 2009 ல் இறந்து விட்டார். வீரமணிக்கு மகள் மாரீஸ்வரி 20, மகன் சிவராஜ் 18, உள்ளனர். சிவராஜ் பிளஸ் டூ படித்து வருகிறார். மாரீஸ்வரி மல்லியில் மில்லில் வேலை செய்த போது உடன் வேலை செய்த பெண்ணின் உறவினர் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி காளிதாசுடன் 27, அலைபேசி மூலம் பழகி 2023 ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2024 ல் ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில் மாரீஸ்வரி, ஏழு மாதங்களுக்கு முன் விஸ்வநத்தம் தாயார் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கிருந்து பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் காளிதாஸ் விஸ்வநத்தம் வந்து மாமியார் வீரமணியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினார்.

போலீசார் அலைபேசி டவர் மூலம் காளிதாஸ் மதுரை - பெருங்குடி அருகே பஸ்சில் சென்று கொண்டிருந்ததை அறிந்து கைது செய்தனர்.

Advertisement