பணம் கேட்டு நச்சரித்த மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்

மப்பேடு,திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 27.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணமூர்த்தி, புது தொழில் துவங்க வேண்டும் என, தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். வழக்கம்போல, நேற்று முன்தினம் காலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தாய் ஜெயந்தி, 43, 'வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, என்னையே மிரட்டுகிறாயா' எனக்கூறி, வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் உடலில் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி பாரதி மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

மப்பேடு போலீசார் ஜெயந்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement