கோவில் நிலங்கள் கபளீகரம் விஸ்வ ஹிந்து பரிஷத் வேதனை
ராமேஸ்வரம்:''அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், ராமேஸ்வரம் திருக்கோவிலின் உபகோவிலுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலத்தை, தமிழக வனத்துறை கையகப்படுத்தி உள்ளது,'' என, தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம் கூறினார்.
ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை முதல் பழனிசாமி வரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு உதவினர்.
ஸ்டாலினும் மத்திய அரசுடன் மோதல் போக்கை தவிர்த்து, 7 கோடி மக்களின் நலன் கருதி சுமுக பேச்சு நடத்தி, மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
ராமேஸ்வரம் ரத வீதியில் ஆக்கிரமித்துள்ள கடைகளால், சுவாமி, அம்மன் ஊர்வலத்திற்கு தடை ஏற்படுகிறது. சில கோவில் செயல் அலுவலர்கள், பிற மதத்தினராக உள்ளனர்.
இதை தடுத்து, ஹிந்து மதம் மீது நம்பிக்கை கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக தக்கார் நியமிக்காமல் அரசு அலட்சியமாக உள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் ராமேஸ்வரம் கோவிலின் உபகோவிலான இரட்டைத் தாழை முனீஸ்வரர் கோவில், ஜடாயு தீர்த்த கோவிலுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலத்தை தமிழக வனத்துறை கையகப்படுத்தியுள்ளது. இதனால் கோவில் திருப்பணிகள் முடங்கியதோடு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.