கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீர் வழிபாடு

திருப்பூர்; கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவில், பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள்நீர் ஊற்றி வழிபட்டனர்.

கோட்டை மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, கடந்த வாரம் பூச்சாட்டுடன் துவங்கியது; நேற்று முன்தினம், கம்பம் நடப்பட்டது. நொய்யல் கரையில் இருந்து கும்பம் எடுத்துவரப்பட்டது. இன்று காலை, பூவோடு எடுத்து பக்தர்கள் ஆடினர். தொடர்ந்து, பெண்கள், மஞ்சள் நீரை கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். இன்று காலை, மஞ்சள் நீராட்டு விழாவும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்கள் குழு சார்பில், நேற்று, ஐந்து பகுதிகளில் இருந்து பூவோடு எடுத்த பக்தர்கள், ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.

பொங்கல் விழாவின் போது, பக்தர்கள், பல்வேறு நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். கால்நடைகள், குழந்தைகள் உட்பட பல்வேறு நலனுக்காக வேண்டிய பக்தர்கள், இன்று, தவழும் குழந்தை போன்ற மண்ணில் செய்த உருவங்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, நேர்த்திக்கடனை நிறைவேற்ற உள்ளனர். அதற்காக, மண்ணில் செய்த, உருவ பொம்மைகள் விற்பனை நேற்று களைகட்டியிருந்தது.

Advertisement