ரத வீதிகளுக்கு தவறான 'தடங்கல் நமூனா'; திரும்பப் பெற கவுன்சிலர் வேண்டுகோள்
அவிநாசி; 'அவிநாசியில் ரத வீதிகளிலுள்ள சொத்துக்கள் மீது அளிக்கப்பட்ட 'தடங்கல் நமூனா'வை திரும்பப் பெற வேண்டும்,' என, பேரூராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார்.
அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் பேரூராட்சி அரங்கில், அதன் தலைவர் தனலட்சுமி தலைமை யில் நடைபெற்து. செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): கைகாட்டிப்புதுார், அவிநாசிலிங்கம்பாளையம், 3வது வீதியில் சாக்கடை வடிகால் மற்றும், 4வது வீதியில் தார் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே, பேரூராட்சி பொது நிதியில் உடனடியாக சாலையை சரி செய்து தர வேண்டும். வார்டுகளில் பல பகுதிகளில் வேகத்தடை இருப்பது தெரியவில்லை. வேகத்தடைக்கு வெள்ளை கோடுகள் அடித்து தர வேண்டும்.
சசிகலா (தி.மு.க.,): 7வது வார்டு வி.எஸ்.வி காலனியில், 26 சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. ஏறத்தாழ, 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக மதிப்புள்ள இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றர். இந்த இடத்தை சுற்றிலும், 200 வீடுகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும்.
சித்ரா (அ.தி.மு.க.,): பேரூராட்சியின், 14வது வார்டு மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குரத வீதிகள் மற்றும் நாரசா வீதி ஆகியவை புல எண்: 85டி, 85இ ஆகிய பகுதிகளுக்கு பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலரால், அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில் 'தடங்கல் நமூனா' கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் எந்த ஒரு பத்திரப்பதிவும் செய்ய முடிவதில்லை.
வங்கி கடன் பெற முடியாமல் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், எனது வார்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, பூண்டி கோவிலுக்கு சொந்தமான இடத்தை தவிர்த்து மற்ற இடங்களுக்கு அளிக்கப்பட்ட தடங்கல் மனுவை ரத்து செய்ய பேரூராட்சி வாயிலாக கோவில் செயல் அலுவலர் மற்றும் சார்-பதிவாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரஹத்துல்லா (தி.மு.க.,): அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பாக பஸ்சுக்காககாத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும். கோடை காலம் துவங்கி உள்ளதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தேவி (அ.தி.மு.க.,): 10வது வார்டில் சீனிவாசபுரத்தில் இருந்து டி.எஸ்.பி., அலுவலகம் வரை மெயின் ரோட்டில் செல்லும் பகுதியில் சாக்கடை கால்வாய் இடிந்துள்ளதால் கழிவுநீர் வெளியேற சிரமமாக உள்ளது.
எனவே புதிய சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும். சீனிவாசபுரம் பகுதியில் கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும். எல்.ஐ.சி., அலுவலகம் அருகே உள்ள குடிநீர் தொட்டிக்கு பாதுகாப்பு கம்பி வேலி அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசியதை தொடர்ந்து, பதில் அளித்த பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
'தினமலர்' நாளிதழை
சுட்டிக்காட்டிய கவுன்சிலர்
கூட்டத்தில், வார்டு கவுன்சிலர் திருமுருகநாதன் (தி.மு.க.,) பேசியதாவது:
அவிநாசி பேரூராட்சி, 18 வார்டு பகுதிகளிலும், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தக் கூடியது எதுவென்று ஆய்வு செய்து கோடை காலம் துவங்கும் போது குடிநீர் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சியில் மீண்டும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
'தினமலர்' நாளிதழில், 'சித்ரா மித்ரா' பகுதியில் ரிசர்வ் சைட் பகுதிகளை அந்தந்த வார்டு ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சாதகமாக செய்து தருவதாக கூறி ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, முறையாக, 18 வார்டுகளிலும் உள்ள ரிசர்வ் சைட்டுகளை பேரூராட்சி கையகப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். சிறுமுகை குடிநீர் நீரேற்று பகுதியில், சாய ஆலைகளின் கழிவுநீர் கலந்து வருவதாக செய்திகள் வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் அவிநாசிக்கு குடிநீர் நீரேற்றும் பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!