அண்ணனை கத்தியால் கிழித்த தம்பி மீது வழக்கு

புதுச்சேரி: சொத்து பிரச்னையில் அண்ணனை பேனா கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த தம்பி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சண்முகாபுரம் மேற்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி, 40; மரம் பொருட்களுக்கு பாலிஷ் போடும் வேலை செய்கிறார். இவர் தாய், தம்பி, தங்கையுடன் வசிக்கிறார். செல்வகணபதியின் தந்தை ரங்கநாதன் சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் சொத்து பிரச்னை காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்வகணபதி சண்முகாபுரம் வி.பி.சிங் நகரில் உள்ள அத்தை வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் இவர் தினமும் பணி முடிந்து சொந்த வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த செல்வகணபதியிடம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அவரது தம்பி கார்த்திக், செல்வகணபதியை வீட்டை வெளியே போ என கூறி அங்கிருந்த பேனா கத்தியால் இடது பக்க தாடை, கழுத்து, மார்பு பகுதியில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த செல்வகணபதி ஜிப்பமரில் சிகிச்சை பெற்று மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement