பிரதான சாலையில் தோண்டிய பள்ளங்களை சீரமைக்க வேண்டும்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நல சங்க தலைவர் பாலா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர், முதல்வருக்கு கோரிக்கை மனு:

புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தனியார் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், அண்ணாசாலை, திருவள்ளுவர் சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில், போக்குவரத்து சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்ட நிலையில், இதற்காக மின் கேபிள் இணைக்கும் பணிக்காக, அங்கு தோண்டிய பள்ளம் அனைத்து சாலைகளிலும் மூடாமல் உள்ளது.

முக்கிய போக்குவரத்து நெருக்கடியான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், விபத்துக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே, சாலை பள்ளங்களை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement