5 பேரை கொன்ற இளைஞர் பற்றி திடுக் தகவல்: போதைக்கு அடிமையாகி கோர தாண்டவமாடிய கொடூரம்

11

திருவனந்தபுரம் : 'ஒரே குடும்பத்தில், ஐந்து பேரை துள்ளத்துடிக்க கொன்ற கொலைகாரனான, 23 வயது அபான், போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தான்' என போலீசார் நேற்று கூறினர்.


கேரளாவையே உலுக்கிய கோர கொலைகள், நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு என்ற இடம் அருகே நடந்தன. எத்தனை மணிக்கு நடந்தன; யார் முதலில் கொல்லப்பட்டனர் என்பதை சொல்ல முடியாத போலீசார், அபான் என்ற இளைஞனால் கொல்லப்பட்ட, அவனின் நெருங்கிய உறவினர்கள் உடல்களை தேடி, அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற போது, சமையல் காஸ் சிலிண்டர் திறந்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


பாட்டி சல்மா பீவி, 88, உட்பட நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேரை, மூன்று வீடுகளில் தேடிச் சென்று, அதற்காக, 20 - 25 கி.மீ., பைக்கில் சுற்றிய அபான், கொடூரமாக தன் பாட்டி, மாமா, அத்தை, தம்பி, வருங்கால மனைவி என ஐந்து பேரை சுத்தியலால் அடித்து கொன்றார்.


பின் அவர், வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு சென்று, தாய் ஷிமி, 55, உட்பட ஆறு பேரை கொன்று விட்டதாக கூறினார். அவரை போலீசார் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கையில், எலி கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளதாக கூறி, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், அவரது சுத்தியல் தாக்குதலில் தப்பிய தாய், தலையில் விழுந்த பலத்த சுத்தியல் அடிக்காக சிகிச்சை பெறுகிறார்.


அந்த இளைஞரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் வாயைத் திறந்தால் தான், எதற்காக அவரின் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை அவர் கொடூரமாக அடித்து கொன்றார் என்ற உண்மை வெளி வரும் என்கின்றனர்.


அந்த இளைஞர், தன், 13 வயது தம்பி அப்சானை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, 'வீட்டில் குழிமந்தி என்ற அரபு உணவை வாங்கி வைத்திருக்கிறேன். வா, வந்து சாப்பிடு' என அழைத்து வந்துள்ளார். வீட்டில் நுழைந்ததும், அந்த சிறுவனை கொடூரமாக சுத்தியலால் தலையில் தாக்கி கொன்றார். அவர் உடலில் அருகே, 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி வைத்திருந்தார்.


நீண்ட நாட்களாக தன் காதலி பர்சானாவை, வீட்டிற்கு பைக்கில் அழைத்து வந்து விடும் அபான், வழக்கம் போலவே நேற்று முன்தினமும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த பெண்ணையும், கொடூரமாக சுத்தியலால் தாக்கி கொன்றார்.


சேரில் இருந்த படி, ரத்தம் சொட்ட இறந்து கிடந்த அந்த பெண்ணின் முகமும் சிதைக்கப்பட்டிருந்தது. கொல்லம் நகரில் முதுகலை பட்டப்படிப்பு படித்த அந்த பெண்ணை, கொலையாளி மணக்க இருந்தார் என கூறப்படுகிறது.


கொலையான, தந்தை வழி மாமா லத்தீப்பின் வீட்டிற்குள் அபான் நுழைந்ததும், அவனை, 'வா' என அழைத்து, டீ போட சமையலறைக்குள் சென்ற அத்தை சாஜிதாவையும் சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார். மாமாவை அவர் தாக்கிய போது, அவர் முகமே தெரியாத அளவுக்கு திரும்பத் திரும்ப, 20க்கும் மேற்பட்ட முறை, சுத்தியலால் தாக்கி கொன்ற பின் தான், அத்தையை நோக்கி சென்றான், அந்த படுகொலைகாரன்.


கணவர் படுகொலை செய்யப்பட்ட விபரம் தெரியாமல் இருந்த அந்த பெண்ணையும் கொன்ற அபான், பின் போலீசில் சரணடைந்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.


முன்னதாக, மாமா வீட்டின் அலமாரியில் ஏதோ ஒன்றை அந்த இளைஞன் தேடியுள்ளான் என்பதை போலீசார் நேற்று கூறினர்.


அவன் எதற்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டான் என்பதை விளக்க முடியாமல் தவித்த போலீசார், 'போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் அபானுக்கு இருந்துள்ளது. ஐந்து பேரை தேடித்தேடி கொலை செய்த நாளில், அவன் எந்த போதை மருந்தை சாப்பிட்டான் என்பதை கண்டறிய முடியவில்லை; மருத்துவ ஆய்வுகளே அதை தெரிவிக்க முடியும்' என்றனர்.


சம்பவ இடங்களுக்கு சென்று பார்த்த மாநில உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில், ''இந்த படுகொலைகளை பார்க்கும் போது, ஏதோ ஒரு அவசரத்தில் நடந்தது போல தெரியவில்லை. முன்னரே திட்டமிட்டு, மிகவும் கொடூரமான முறையில் நடந்துள்ளது,'' என்றார்.


அபான் பற்றி அண்டை வீட்டார் கூறுகையில்,'ரொம்ப நல்ல பையன்... அவனா இத்தனை பேரை கொடூரமாக கொன்றான் என்பது சந்தேகமாக இருக்கிறது. சத்தமாகக் கூட அவன் பேசி நாங்கள் பார்த்ததில்லையே' என்றனர்.


இப்போதைய நிலவரப்படி, குடும்பத்தில் அதிகமாக ஏற்பட்ட கடனால், இந்த தாக்குதலில் அந்த இளைஞன் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதுபோல, வெளிநாடு ஒன்றில் வேலை பார்க்கும் அந்த இளைஞனின் தந்தை, கேரளா வந்தால் தான், இந்த வழக்கில் உண்மை நிலவரம் தெரியும் என போலீசார் கூறினர்.

Advertisement