வீரதீர செயல்களுக்கான போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: வீரதீர செயல்களுக்கான போட்டியில் சாதித்த புதுச்சேரி மாணவர்களை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.

இந்திய பாதுகாப்பு துறை மற்றும் இந்திய கல்வித்துறை இணைந்து ஆண்டுதோறும் வீர் கதா போட்டியை நடத்துகின்றன.

இதில் இந்திய சுதந்திரப் போர், விடுதலை போராட்ட வீரர்கள், விடுதலைக்கு பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறிய செய்யும் நோக்கத்தில் ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லுாடக விளக்க காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி 2025 நடப்பு கல்வி ஆண்டில் நடந்த வீர் கதா 4.0 போட்டியில் நாடு முழுதிலும் இருந்து ஒரு கோடியே 76 லட்சம் மாணவர்கள் பங்கேற்றத்தில், சிறந்த 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில் மூன்று மாணவர்கள் புதுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் விஜய விவேஷ்குமார் ஓவியப்போட்டியிலும், விவேகானந்தா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் முகமது தாஜ்தீன், வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி குகானா ஆகியோர் கவிதை போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

தேசிய அளவில் வெற்றி பெற்று கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் இருந்து சிறந்த மாணவர்களுக்கான விருது, 10 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் பதக்கம் பெற்றனர்.

கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதுச்சேரி திரும்பிய மாணவர்களை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Advertisement