மழை நிவாரணம் வழங்கக்கோரி வேளாண் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி: மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர், வேளாண் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரியில் பெஞ்சல் புயல், கனமழை காரணமாக பொது மக்கள், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். விவசாய தொழிலாளர்களுக்கு மழை நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதுவரையில் தொழிலாளர்களுக்கு அந்த நிவாரணம் வழங்கவில்லை.

இதை கண்டித்து,விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நேற்றுகாலை புதுச்சேரி வேளாண்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், துணை செயலாளர் சேதுசெல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

அரசு அறிவித்த மழை நிவாரண தொகை, தொழிலாளர்களுக்கான மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்களை உடனே வழங்கவேண்டும். விடுபட்ட விவசாய தொழிலாளர்களை நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வேளாண் இயக்குனர் வசந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, மழை நிவாரணம் மற்றும் வேளாண் உபகரணங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement