அண்ணனை கத்தியால் குத்திய தம்பி மீது வழக்கு

புதுச்சேரி: சொத்து பிரச்னையில், அண்ணனை கத்தியால் குத்திய தம்பி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரி, சண்முகாபுரம் மேற்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி, 40; மரம் இழைப்பக ஊழியர். இவருக்கும், அவரது தம்பி கார்த்திகேயன், 36; தங்கை சிவசங்கரி, ஆகியோருக்கும் இடையே, சொத்து பிரச்னை இருந்து வருகிறது.

நேற்று முன்தினம், மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அப்போது, கோபமடைந்த கார்த்திகேயன், செல்வகணபதியை திட்டி, சிறிய கத்தியால் முகம், கழுத்து பகுதிகளில் குத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்.

காயமடைந்த செல்வகணபதி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார், கார்த்திகேயன் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement