மேல்களவாயில் மேம்பாலம் கட்டுவது எப்போது: ஆண்டு தோறும் பொது மக்கள் அவதி

செஞ்சி: செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சியில் இருந்து 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மேல்களவாய் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

செஞ்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு இந்த கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் குறுக்கே சங்கராபரணி ஆற்றில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலத்தின் குழாய்கள் பெரும் பகுதி மணலும், குப்பைகளும் சேர்ந்து அடைபட்டுள்ளன. ஒரே ஒரு குழாய் வழியாக மட்டும் தண்ணீர் செல்கிறது. தரைப்பாலத்தின் மேல் பகுதியும் பல இடங்களில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

குறைவான மழை பெய்தாலும் கூட பாலத்தின் மேலே தண்ணீர் செல்கிறது. கன மழை பெய்தால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

ஆற்றின் இரண்டு பக்கமும் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளில் இருந்து வழியும் அசுத்தமான தண்ணீர் ஆற்றில் கலந்து ஆற்று நீர் துர்நாற்றத்துடன் சாக்கடையை போல் ஓடுகிறது.

இதில் நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் மீதும் துர்நாற்றம் வீசுவதுடன், அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

தரைப்பாலத்தில் எந்த இடத்தில் சிமென்ட் தரை உடைந்து இருக்கிறது என தெரியாமல் பைக்கில் செல்பவர்கள் பல நேரம் குழந்தைகளுடன் ஆற்றில் விழுந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.

இதனால், கடந்த ஆண்டு பாலம் கட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை எந்த ஒரு பூர்வாங்க நடவடிக்கையும் துவங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கிய சில நாட்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது 3 மாதங்களுக்கும் மேலாக இந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதுவரை பொது மக்கள் 4 கி.மீ., துாரம் சுற்று வழியாக சென்று வந்தனர்.

தற்போது ஆற்றில் வெள்ளம் வடிந்துள்ளது. பாலம் கட்டுவதற்கான ஏற்ற சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக பணியை துவங்கினால் இந்த ஆண்டு வடகிழக்கு பருமழைக்கு முன்பாக பணிகளை முடிக்க முடியும்.

எனவே மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக துவங்க வேண்டும் என பள்ளி மாணவர்களும், பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் மற்றும் மாவட்ட கலெக்டரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement