குளத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் சாகுபடிக்கு ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்

மேலுார்: புதுப்பட்டி கொல்லங்குளத்தை புறக்கணிக்கும் அதிகாரிகளால் தனிநபர்கள் குளத்தை நிலமாக ஆக்கிரமித்து வருமானம் பார்க்கின்றனர்.

மருதுார் கண்மாயில் இருந்து சுண்ணாம்பூர் 10 வது பிரிவு கால்வாய் வழியே வரும் தண்ணீர் புதுப்பட்டியில் 9 ஏக்கர் பரப்பில் உள்ள கொல்லன் குளத்திற்கு வந்து சேரும். திருவாதவூர் ஓவா மலையில் இருந்து சித்தன் குளம், இளம் பழம், மூக்கனேந்தல் கண்மாய் வழியாக வரும் தண்ணீராலும் கொல்லங்குளம் நிரம்பும். இரு வழிகளிலும் குளம் நிரம்பினால் ஏராளமான ஏக்கர் பாசனம் பெறும். அறுவடை முடிந்த பின்னும் தண்ணீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது.

இக்குளம் யாருக்கு சொந்தம் எனத் தெரியாமல் இன்றுவரை அதனை புறக்கணித்து வருகின்றனர். இது தனிநபர்களுக்கு வாய்ப்பாக அமைந்து, குளத்தின் உள்வாய் பகுதியில் சாகுபடி செய்யத் துவங்கிவிட்டனர்.

விவசாயிகள் கூறியதாவது: குளத்தின் அருகே விவசாயிகள் நிலமாக ஆக்கிரமிக்க துவங்கியுள்ளனர். மேலும் செடிகள் வளர்ந்து குளத்தின் பரப்பளவு குறைய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் நீர்வளத்துறை, ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்தால், இரு துறையினரும் கண்மாய்கள் எங்களுக்குரியது இல்லை என புறக்கணித்து, பராமரிப்பு நிதி ஒதுக்க மறுக்கின்றனர். நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளக்கரையை பலப்படுத்தி, தண்ணீர் சேமிக்க சீரமைக்க வேண்டும் என்றனர்.

Advertisement