குழாய் இருக்கு குடிநீர் இல்லை, தெருவிற்கு ரோடு இல்லை

ராஜபாளையம்: ரோடு, தெரு விளக்கு, வசதியில்லை, குழாய் பதித்தும் குடிநீர் வரவில்லை, சேதமான பாலம், செயல்படாத சுகாதாரவளாகம், பாதியில் நிற்கும் ரோடு, வாறுகால் பணி உட்பட பல்வேறு பிரச்னைகளால் ராஜபாளையம் இந்திரா நகர் குடியிருப்போர் தவித்து வருகின்றனர்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பால்பாண்டி, கவுதம், ஆறுமுகம், பஞ்சவர்ணம், சத்யா, செல்வி கூறியதாவது: மலை அடிவாரத்தை ஒட்டி குடியிருப்பு அமைந்துள்ளதால் மேடு பள்ளமாகவே தெருக்கள் உள்ன. அனைத்து தெருக்களிலும் ரோடு வசதி செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி விடுகிறது.

ரைஸ் மில் அருகாமை தெருவில் ரோடு, வாறுகால் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமமப்படுகின்றனர். மெயின் ரோட்டில் சஞ்சீவி மலையில் இருந்து வரும் ஓடையில் லாரி பதிந்து பாலம் சேதமாகி 2 கி.மீ., வரை குடியிருப்பு வாசிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றி செல்கின்றனர். அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஒரு பக்கம் மலை அடிவாரம் மறுபக்கம் கண்மாயாக உள்ளதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதிய தெருவிளக்கு வசதி வேண்டும். இங்கு உள்ள ரேஷன் கடையும், அங்கன்வாடி மையமும் இடியும் நிலையில் உள்ளதால் ஊர் சமூக கூடத்தில் செயல்படுகிறது. பொது சமுதாய கூட வசதியில்லை. பெண்களுக்கான சுகாதாரவளாகம் டாஸ்மாக் அருகே அமைக்கப்பட்டதால் உபயோகிக்க தயங்குகின்றனர். எனவே கட்டி வைத்தும் காட்சி பொருளாக உள்ளது.

தாமிரபரணி குடிநீர் குழாய் மட்டும் பதித்து குடிநீர் இதுவரை சப்ளை இல்லை. குப்பை சேகரிக்கும் இடம் ஒதுக்காததுடன் போதிய ஆட்கள் இல்லாததால் பொது இடத்தில் குவித்து தீ வைத்து எரிக்க வேண்டியுள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

Advertisement