ஆஸ்திரேலிய பவுலருக்கு அனுமதி

மெல்போர்ன்: சர்வதேச போட்டியில் பந்துவீச ஆஸ்திரேலியாவின் குனேமன்னுக்கு, ஐ.சி.சி., அனுமதி வழங்கியது.

ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ குனேமன் 28. சமீபத்தில் இலங்கையில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 'சுழலில்' அசத்திய இவர், 16 விக்கெட் சாய்த்தார். ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இத்தொடருக்கு பின், குனேமன் பந்துவீசும் முறையை ஆய்வு செய்ய போட்டி நடுவர்கள், ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்தினர். ஐ.சி.சி., நிர்ணயித்த அளவிற்கு மேல் முழங்கையை வளைத்து பந்துவீசியதாக குற்றம் சாட்டினர். இதனால் இவருக்கு, சர்வதேச போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருந்தது.
மெல்போர்னில் உள்ள தேசிய கிரிக்கெட் சென்டரில் குனேமன் பந்துவீசும் விதம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரி அளவிற்குள் முழங்கையை வளைத்து பந்துவீசியது தெரிய வந்தது. இதனையடுத்து இவர் மீதான தடை விலக்கப்பட்டது. சர்வதேச போட்டியில் பந்துவீச இவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.


கடந்த 2023ல் டெஸ்டில் அறிமுகமான குனேமன், இதுவரை 5 போட்டியில், 25 விக்கெட் சாய்த்துள்ளார். இவர் மீதான தடை விலக்கப்பட்டதால், வரும் ஜூன்-ஜூலையில் நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வில் இடம் பெறுவார்.

Advertisement