சுப்மன் கில் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் சுப்மன் கில், 817 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர், வங்கதேசம் (101*), பாகிஸ்தானுக்கு (46) எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நல்ல துவக்கம் கொடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சதம் (100*) விளாசிய இந்தியாவின் கோலி, 743 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா (757 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார். வங்கதேசத்துக்கு எதிராக 41* ரன் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் லோகேஷ் ராகுல் (627) 15வது இடத்துக்கு முன்னேறினார்.
குல்தீப் 'நம்பர்-3': பவுலர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (656 புள்ளி) 3வது இடத்தில் தொடர்கிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி (599), 14வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா (601) 13வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிரண்டு இடங்களில் இலங்கையின் மகேஷ் தீக் ஷனா (680 புள்ளி), ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (658) உள்ளனர்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (213 புள்ளி) 9வது இடத்தில் நீடிக்கிறார்.