ஜார்க்கண்டில் வன்முறை

ராஞ்சி:ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் சவுக் என்ற இடத்தில், மஹா சிவராத்திரியையொட்டி, நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, கொடி ஏற்றுவது, ஒலிபெருக்கிகள் வைப்பது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர். அங்கிருந்த கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. கலவரம் நடந்த பகுதியில், ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சஞ்சய் சேத் கூறுகையில், ''ஹிந்து பண்டிகைகளின் போது ஜார்க்கண்டில் வன்முறை நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. வங்கதேச ஊடுருவல்காரர்கள் தான் இதற்கு காரணம்,'' என, குற்றஞ்சாட்டினார்.

Advertisement