10 ஆண்டுகளில் வழக்கு நடத்த அரசுக்கு ரூ.400 கோடி செலவு

புதுடில்லி :நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க, கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் மத்திய அரசு, வழக்குகளை விசாரிக்க 66 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 9 கோடி ரூபாய் அதிகம். கடந்த 2014 - 15ம் ஆண்டு முதல், நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிப்பதற்கான செலவு அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த இரு ஆண்டுகளில் மட்டுமே அதிகம் செலவு ஆகவில்லை.
கடந்த 2014 - 15ல், வழக்குகளுக்கான செலவு தொகை 26.64 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2015 - 16ல் 37.43 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2014 - 15 நிதியாண்டு முதல் 2023 - 24 நிதியாண்டு வரை, வழக்குகளுக்காக, 409 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, தேசிய வழக்கு கொள்கையை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட சட்ட வரைவு, மத்திய அரசின் இறுதி முடிவுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.