தி.மு.க., - அ.தி.மு.க.,வினர்கட்டட பூமி பூஜையில் மோதல்


தி.மு.க., - அ.தி.மு.க.,வினர்கட்டட பூமி பூஜையில் மோதல்


பாலக்கோடு:பாலக்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பூமி பூஜையின் போது, - தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, நபார்டு திட்டத்தில், 1.41 கோடி ரூபாய் மதிப்பில், 6 வகுப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி, பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் நேற்று நடப்பதாக, அ.தி.மு.க.,வினர் பேனர் வைத்திருந்தனர். இதனால் கட்சியினர் பலர் பள்ளியில் குவிந்தனர்.
அப்போது, பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் தமிழக அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு, எதிர்கட்சியினர் எப்படி வரலாம். மேலும், பேனரில் தமிழக முதல்வர், அமைச்சர் படங்கள் மற்றும் மாவட்ட கலெக்டரின் பெயரும் புறக்கணித்தாக கூறி, பூமி பூஜைக்கு கண்டனம் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் அதிகரித்து, ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கி கொள்ளும் அளவிற்கு மோதல் முற்றியது.
தர்மபுரி ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரண், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், தி.மு.க.,வை சேர்ந்த பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி ஆகியோர் இணைந்து, பூமி பூஜை செய்து கட்டட பணியை துவங்கி வைத்தனர்.

Advertisement