ஆப்கானிஸ்தான் 'திரில்' வெற்றி: வெளியேறியது இங்கிலாந்து


லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி, கடைசி ஓவரில் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 177 ரன் விளாசிய ஜத்ரன், 5 விக்கெட் வீழ்த்திய ஓமர்சாய் வெற்றிக்கு கைகொடுத்தனர். தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஜோ ரூட் சதம் வீணானது.


பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. லாகூரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ் (காயம்) நீக்கப்பட்டு, ஓவர்டன் வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஆர்ச்சர் மிரட்டல்: ஆப்கானிஸ்தான் துவக்கத்தில் திணறியது. ஆர்ச்சர் 'வேகத்தில்' குர்பாஸ் (6), அடல் (4), ரஹமத் (4) வெளியேற, 9 ஓவரில் 37/3 ரன் எடுத்து தத்தளித்தது. பின் 23 வயதான இப்ராகிம் ஜத்ரன், கேப்டன் ஹஷ்மதுல்லா இணைந்து அணியை மீட்டனர். 4வது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்தனர். ஹஷ்மதுல்லா, 40 ரன்னில் வெளியேறினார்.
சூப்பர் சதம்: அதிரடியாக ஆடிய ஜத்ரன், இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். லவிங்ஸ்டன் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட இவர், 106 பந்தில் சதம் எட்டினார். ஜத்ரன்-ஓமர்சாய் 5வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். ஓமர்சாய் 41 ரன் எடுத்தார். தனது விளாசலை தொடர்ந்த ஜத்ரன், ஆர்ச்சர் ஓவரில் ஒரு சிக்சர், 'ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, 20 ரன் எடுக்கப்பட்டன.


10 ஓவரில் 113 ரன்: கடைசி கட்டத்தில் ஜத்ரன்-நபி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்தனர். ஜோ ரூட் ஓவரில் நபி 2 சிக்சர், ஒரு பவுண்டரி, ஜத்ரன் ஒரு பவுண்டரி அடிக்க, 23 ரன் கிடைத்தன. லிவிங்ஸ்டன் பந்தில் ஜத்ரான் (177 ரன், 12 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டானார். நபி, 40 ரன் எடுத்தார். கடைசி 10 ஓவரில் 113 ரன் எடுக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325/7 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார்.


விக்கெட் சரிவு: கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அதிர்ந்தது. பில் சால்ட் (12), ஜேமி ஸ்மித் (9) நிலைக்கவில்லை. ரஷித் கான் சுழலில் 'ஆபத்தான' டக்கெட் (38) சிக்கினார். நபி பந்தில் ஹாரி புரூக் (25) அவுட்டாக, 22 ஓவரில் 135/4 ரன் எடுத்து தவித்தது.

ஜோ ரூட் சதம்: பின் அனுபவ ஜோ ரூட், கேப்டன் பட்லர் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். ரூட், 50 பந்தில் அரைசதம் எட்டினார். நபி பந்தில் சிக்சர் அடித்த பட்லர் நம்பிக்கை தந்தார். பட்லர், 38 ரன் எடுத்தார். லிவிங்ஸ்டன்(10) ஏமாற்றினார். தனிநபராக போராடிய ஜோ ரூட், 98 பந்தில் சதம் எட்டினார். இது ஒருநாள் அரங்கில் இவரது 17வது சதம். ஓமர்சாய் பந்தில் ரூட்(120 ரன், 11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. இங்கிலாந்து அணி 46 ஓவரில் 291/7 ரன் எடுத்திருந்தது.


கடைசி கட்டத்தில் ஓவர்டன், ஆர்ச்சர் போராடினர். ஓமர்சாய் பந்தில் ஓவர்டன் (32) அவுட்டாக, 'டென்ஷன்' அதிகரித்தது. ஆர்ச்சர் 14 ரன்னில் வெளியேறினார். இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில், 13 ரன் தேவைப்பட்டன. கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது. அபாரமாக பந்துவீசிய ஓமர்சாய், முதல் 4 பந்தில் 4 ரன் கொடுத்தார். 5வது பந்தில் ரஷித் (5) அவுட்டாக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் வெற்றி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 317 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் 'வேகத்தில்' மிரட்டிய அஸ்மதுல்லா ஓமர்சாய், 5 விக்கெட் வீழ்த்தினார்.

177 ரன் சாதனை
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன் எடுத்து சாதனை படைத்தார் ஜத்ரன் (177). அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் டக்கெட் (165 ரன், எதிர், ஆஸி., லாகூர், 2025) உள்ளார்.
* சாம்பியன்ஸ் டிராபியில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரரானார் ஜத்ரன். உலக கோப்பை அரங்கில் (129 ரன், எதிர், ஆஸி., மும்பை, 2023) சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரரும் இவர் தான். ஐ.சி.சி., தொடரில் இரண்டாவது சதம் அடித்தார்.
* ஒருநாள் அரங்கில் அதிபட்ச ரன் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரரானார் ஜத்ரன் (177). தனது முந்தைய சாதனையை (162 ரன், எதிர், இலங்கை, பல்லேகலே, 2022) முறியடித்தார்.
* பாகிஸ்தான் மண்ணில், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த நான்காவது வீரரானார் ஜத்ரன் (177). முதல் 3 இடங்களில் கேரி கிர்ஸ்டன் (தெ.ஆ., 188, எதிர், யு.ஏ.இ., ராவல்பிண்டி, 1996), விவியன் ரிச்சர்ட்ஸ் (வெ.இ., 181, எதிர், இலங்கை, கராச்சி, 1987), பகர் ஜமான் (பாக்., 180, எதிர், நியூசி., ராவல்பிண்டி, 2023) உள்ளனர்.
* ஒருநாள் அரங்கில் தனது 6வது சதம் அடித்தார் ஜத்ரன். 1,500 ரன் மைல்கல்லை எட்டினார். 35 ஒருநாள் போட்டியில் 1,633 ரன் எடுத்துள்ளார்.

ஆர்ச்சர் '50'
நேற்று 3 விக்கெட் சாய்த்த ஆர்ச்சர், ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 50 விக்கெட் (30 போட்டி) வீழ்த்திய இங்கிலாந்து வீரரானார். இதற்கு முன் ஆண்டர்சன் 31 போட்டியில் இம்மைல்கல்லை எட்டியிருந்தார்.

டக்கெட் '1000'
நேற்று 4வது ரன் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ரன் (956 பந்து) எட்டினார் டக்கெட். அதிவேகமாக இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இங்கிலாந்து வீரரானார். முதலிரண்டு இடங்களில் பட்லர் (860), ஜேசன் ராய் (952) உள்ளனர்.

யூனிஸ் கான் உதவி
ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனிஸ் கான் உள்ளார். இவரது வார்த்தைகள் ஜத்ரன் சதம் விளாச உதவியுள்ளது. ஜத்ரன் கூறுகையில்,''கடந்த ஒரு ஆண்டாக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இந்தச் சூழலில் சதம் விளாசியது மகிழ்ச்சி. பெரிய ஸ்கோரை எட்ட வேண்டுமென ஆலோசகர் யூனிஸ் கான் 'அட்வைஸ்' செய்தார். இதற்கேற்ப 177 ரன் எடுத்தது திருப்தியாக இருந்தது,''என்றார்.

மார்க் உட் காயம்
நேற்று மார்க் உட் (7.4வது ஓவர்) இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இவருக்கு பதில் டாம் பான்டன் 'பீல்டிங்' செய்தார். பின் 34வது ஓவரில் தான் பந்துவீசினார். இவரது காயம், இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.

மீண்டும் 'அடி'
டில்லியில் 2023ல் நடந்த உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி(49.5 ஓவரில் 284), இங்கிலாந்தை (40.3 ஓவரில் 215) 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. நேற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.


மும்முனைப் போட்டி
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி (0) அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 'பி' பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற தென் ஆப்ரிக்கா (3 புள்ளி), ஆஸ்திரேலியா (3), ஆப்கானிஸ்தான் (2) என, மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்து ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலியா (பிப். 28, லாகூர்), தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து (மார்ச் 1, கராச்சி) அணிகள் மோதுகின்றன.

Advertisement