மார்ச் 18ல் என்.டி.சி., அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட திட்டம்

கோவை: என்.டி.சி., மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து, கோவை காட்டூரில் உள்ள, என்.டி.சி., தென்மண்டல அலுவலகத்தை, மார்ச் 18ல் முற்றுகையிட்டு, பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக, எல்.பி.எப்., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏழு என்.டி.சி., மில்கள் உள்ளன. கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக, 2020 மார்ச் 23 முதல் இன்று வரை மில்கள் செயல்படவில்லை. ஊழியர்களுக்கு, 50 சதவீத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

2024 மார்ச், 15ல் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 50 சதவீத நிலுவை ஊதியம் வழங்கப்பட்டது. 2024 அக்., முதல் 2025 ஜன., வரையிலான நான்கு மாதங்களுக்கு மில் பொது மேலாளர்கள், மேலாளர்கள், நிர்வாக அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பவர் ஹவுஸ், வாட்ச் அண்டு வார்டு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, ஊதியம் வழங்கவில்லை.

2024 டிச., 4ல் டில்லி சென்று, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங்கையும், என்.டி.சி., சேர்மனையும் பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமையில், எல்.பி.எப்., தொழிற்சங்கத்தினர் நேரில் சந்தித்து முறையிட்டனர். ஊதியம், நிலுவை ஊதியம், போனஸ் வழங்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, எல்.பி.எப்., தொழிற்சங்கம் சார்பில், காட்டூரில் என்.டி.சி., தென்மண்டல அலுவலகத்தை, மார்ச் 18ல் முற்றுகையிட்டு, பூட்டு போட்டு மூடும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர், நிதியமைச்சர் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர், ஜவுளித்துறை செயலர் ஆகியோருக்கு, தேசிய பஞ்சாலை கழக தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் பார்த்தசாரதி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement