ரூ.41.5 கோடி கொடுத்தால் 'கோல்டு கார்டு' அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

2

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்டு கார்டு' என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக, 41.5 கோடி ரூபாய் கொடுத்தால், 'கிரீன் கார்டு' வைத்துள்ளோருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும், இந்த கோல்டு கார்டில் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, குடியேற்றம் தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளோரை அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார்.

அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, 'கிரீன் கார்டு' என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிப்பதற்கான தகுதியை அளிக்கிறது. அமெரிக்க குடிமகன்களைப் போல பெரும்பாலான உரிமைகள் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு கிடைக்கும். ஆனால், தேர்தல்களில் ஓட்டளிப்பது, சில அரசு சலுகைகளை பெற முடியாது.

கிரீன் கார்டு பெறுவதற்காகவே பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், இதை குறிப்பிட்ட காலத்தில் புதுப்பித்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலம் அமெரிக்காவில் வசித்த பிறகே, கிரீன் கார்டு பெற முடியும். அதுபோல, குறிப்பிட்ட காலம் கிரீன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே, அமெரிக்க குடியுரிமையை கோர முடியும்.

இந்நிலையில், கிரீன் கார்டுதாரர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் அடங்கிய கோல்டு கார்டு என்ற திட்டத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். இதற்காக செய்ய வேண்டியது ஒன்றுதான். 41.5 கோடி ரூபாய் கட்டணத்தை செலுத்தினால் கோல்டு கார்டு பெறலாம். இதன் வாயிலாக, அமெரிக்க குடியுரிமை பெறுவது சுலபமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:

அடுத்த இரண்டு வாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதுவரை, இ.பி., 5 முதலீட்டாளர் விசா என்ற விசா நடைமுறையில் இருந்தது. இதன்படி, 9.14 கோடி ரூபாயை அமெரிக்காவில் முதலீடு செய்தால், அவர்களுக்கு இந்த விசா கிடைக்கும். இதில் பல மோசடிகள் நடந்துள்ளன. முறையாக செயல்படுத்தப்படவில்லை.

அதனால், அந்த விசாவை ரத்து செய்துவிட்டு, கோல்டு கார்டு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த திட்டத்தின் வாயிலாக, 41.5 கோடி ரூபாய் கொடுத்து, கோல்டு கார்டுகளை வாங்கி கொள்ளலாம்.

முதல் கட்டமாக, 10 லட்சம் கோல்டு கார்டுகளை விற்பனை செய்ய உள்ளோம். இதன் வாயிலாக அரசுக்கு நேரடியாக அந்தப் பணம் கிடைக்கும். அது அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு லாபமா?

அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கென பல விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில், எச்1பி விசாவை பயன்படுத்துவோரில் இந்தியர்களே அதிகம். கடந்த நிதியாண்டில், 52,892 நிறுவனங்களுக்கு, 3.9 லட்சம் எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டன. இதில், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற இந்திய நிறுவனங்கள், அதிக விசா பெற்ற, 10 நிறுவனங்களில் உள்ளன.டிரம்பின் முந்தைய ஆட்சி காலத்தில் எச்1பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுபோன்ற கட்டுப்பாடுகள் இந்த ஆட்சியிலும் தொடரும் என்ற அச்சம் உள்ளது. இந்த நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள், அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்புவதற்கு கோல்டு கார்டு மற்றொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனாலும், 41.5 கோடி ரூபாய் அதற்காக செலவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

Advertisement