அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை

திருத்தணி:அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், நேற்று மயான சூறை நடந்தது.

திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயானச்சூறை பிரம்மோற்சவ விழா, பிப்.28ம் தேதி இரவு, பெரியாண்டவர் விழாவுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் சிவராத்திரி கரகம் ஊர்வலம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று மயான சூறை விழா நடந்தது.

நேற்று, மதியம் 1:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி, கரக ஊர்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தணி நந்தி ஆற்றின்கரையில் எழுந்தருளினார்.

ஆற்றில் மயான சூறை நடந்தது. அப்போது மூன்று பக்தர்கள் உடலில் அலகு குத்தி கிரேனில் தொங்கியவாறு உற்சவர் அம்மனுக்கு மலர் மாலை அணிவித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவர் அம்மன் மீது காய்கறிகள் கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை வீசி எறிந்து வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பர்வதராஜகுல மரபினர் செய்திருந்தனர்.

இன்று முதல், தினமும் இரவு ரிஷபம், நாகம், அன்னம், யானை, குதிரை, புலி, கேடயம் போன்ற வாகனங்களில் உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Advertisement