ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்

புதுடில்லி:உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து முடிந்த மஹா கும்பமேளா குறித்து கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'ஒற்றுமையின் மகாயாகமாக இது அமைந்தது. கும்பமேளாவில் ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்' என, தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மஹா கும்பமேளா விழா நடந்தது.
கடந்த மாதம் 13ல் துவங்கி, நேற்று முன்தினம் வரை, 45 நாட்களுக்கு நடந்த இந்த மஹா கும்பமேளாவில், 65 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர் என, உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்த மஹா கும்பமேளா குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
பிரயாக்ராஜில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக என் எண்ணங்களை பதிவிட விரும்புகிறேன். முதலில் இந்த விழாவை சிறப்பாக நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச பா.ஜ., அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநிலத்துக்குட்பட்ட தொகுதியின் எம்.பி., என்ற முறையில் பெருமை அடைகிறேன். துாய்மை பணியாளர், போலீஸ், சுகாதாரப் பணியாளர், படகு ஓட்டிகள், சமையற்காரர் என, ஒவ்வொருவரும் தன்னார்வத்துடன், தன்னலமில்லாமல் சேவையாற்றினர். விழா சிறப்பாக நடப்பதற்கு உதவிய, உத்தர பிரதேச மக்களுக்கும் பாராட்டுகள்.
முந்தைய கும்பமேளாக்களின் அடிப்படையில், இந்த ஆண்டு எவ்ளவு பேர் வருவர் என, கணிக்கப்பட்டது.
ஆனால், அந்தக் கணிப்புகளை எல்லாம் தாண்டி, 65 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த திருவிழா, உலகளவில் நிர்வாகவியல் நிபுணர்கள், திட்டமிடல் மற்றும் கொள்கை நிபுணர்களுக்கு புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.
ஒற்றுமையின் மகாயாகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதே நேரத்தில் இது நமக்கெல்லாம் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி, மக்களுடைய உணர்வுகள் விழித்துள்ளன.
நாம் எதிர்பார்த்ததைவிட, கணித்ததைவிட அதிகமான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்றுள்ளனர். இந்த கும்பமேளா பல சாதனைகளை, படைத்துள்ளது. மேலும், எதிர்கால திட்டமிடலுக்கு அஸ்திவாரத்தையும் போட்டுள்ளது.
இந்தளவுக்கு அதிகமான மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல.
சேவைகளில் ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக, கங்கை தாய், யமுனை தாய், சரஸ்வதி தாயிடமும், கடவுளின் வடிவமாக நான் பார்க்கும் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
66.21 கோடி பேர்!
நம்பிக்கை, ஒற்றுமை, சமத்துவத்தின் மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில், 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடினர். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடந்த இந்தத் திருவிழா, உலக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று; மறக்க முடியாத ஒன்று.
- யோகி ஆதித்யநாத்,
உ.பி., முதல்வர், பா.ஜ.,
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
-
விண்வெளிக்கு செல்கிறார் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி!