பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை

4


பெங்களூரு :கர்நாடக ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இட்லி வேக வைப்பதற்கு, துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் பரவுவதாக மாநில அரசு எச்சரித்துள்ளது.


கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுதும் 251 இடங்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ஏராளமான ஹோட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிக வெப்பத்தில் பிளாஸ்டிக்கில் இருந்து நச்சுத்தன்மை வெளியாகும். பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்தி இட்லியை நீராவியில் வேக வைக்கும்போது, 'டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக்' போன்றவை வெளியாகும். இட்லியை சாப்பிடுபவரின் உடலுக்குள் சிறிது சிறிதாக அந்த ரசாயனங்கள் சேரும்போது, புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது.

இது குறித்து, கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ்கூறியதாவது:

இட்லியை வேக வைப்பதற்கு, துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, 52 ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சேகரித்த இட்லிகளில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பண்டங்கள் தயாரிப்பில், பிளாஸ்டிக் பயன்படுத்த மாநிலம் முழுதும் தடை விதிக்கப்படுகிறது.

புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணியாக பிளாஸ்டிக் இருப்பதால், உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் துகள்கள் சேரும் அபாயம் உள்ளதால், அதை ஹோட்டல் நடத்துபவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். யாரேனும் அதுபோன்று செய்தால், அரசின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பிளாஸ்டிக் தாள்களில் வேக வைக்கப்பட்ட இட்லியை ஆய்வகத்தில் சோதித்ததாகவும், அதில், இந்த இட்லியை சாப்பிடு வோருக்கு புற்று நோய் அபாயம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement