கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகல்

கராச்சி: இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பட்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ல் இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணியின் கேப்டனாக ஜோஷ் பட்லர் 34, நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி, 2022ல் 'டி-20' உலக கோப்பை வென்றது. அதன்பின், 50 ஓவர் (2023), 'டி-20' (2024) உலக கோப்பையில் சோபிக்கத்தவறியது. சமீபத்திய தொடர்களிலும் ஏமாற்றிய இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இன்று கராச்சியில் நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியுடன் இங்கிலாந்து ஒருநாள், 'டி-20' அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பட்லர் தெரிவித்தார்.
இதுகுறித்து பட்லர் கூறுகையில், ''கேப்டன் பொறுப்பில் இருந்து விலக, சரியான நேரமாக கருதுகிறேன். இத்தொடர் எனது கேப்டன் பதவிக்கு முக்கியமானதாக இருந்தது. எதிர்பார்த்த முடிவு கிடைக்காததால், விலக முடிவு செய்தேன்,'' என்றார்.

Advertisement