தலையில் ‛ ' டம்புல்ஸ்'சை போட்டு தொழிலாளியை கொன்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார், கேரள மாநிலம், பாலக்காடைச் சேர்ந்தவர் சஜீஷ், 29. கைரடி பகுதியைச் சேர்ந்தவர் அக் ஷர், 28.
இருவரும், ஸ்ரீபெரும்புதுார் அருகே தெரேசாபுரம் ஜெமி நகரில் தங்கி, வல்லம் -- வடகால் சிப்காட்டில் கட்டப்பட்டு வரும், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கண்ணாடி பொருத்தும் பணி செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, தெரேசாபுரம் டாஸ்மாக்கில் மது அருந்தியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சஜீஷ், அருகில் இருந்த கட்டையால் அக் ஷர் தலையில் அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அக் ஷர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நள்ளிரவு 1:00 மணிக்கு கோபத்துடன் அறைக்கு வந்தார்.
அப்போது, அறையில் துாங்கிக்கொண்டிருந்த சஜீஷ் தலையில், உடற்பயிற்சி செய்வதற்காக வைத்திருந்த டம்புல்ஸை போட்டார். இதில், சம்பவ இடத்திலேயே சஜீஷ் உயிரிழந்தார்.
பின், முதல் தளத்தில் இருந்து சஜீஷின் உடலை கீழே இழுத்து வந்து, அறையின் வெளியில் போட்டுவிட்டு, அக் ஷர் தப்பினார்.
தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தலைமறைவாக இருந்த அக் ஷரை தேடி வந்தனர்.
இந்நிலையில், வல்லம் -- வடகால் சிப்காட் சாலையோரம் அமர்ந்திருந்த அக் ஷரை, நேற்று போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.