ஓய்வு நாளில் பணப்பலன் வழங்காததை கண்டித்து குடும்பத்துடன் ஊழியர் போராட்டம்

சென்னை: ஓய்வு பெற்ற நாளில், எந்த வித பலனும் அளிக்காமல், வெறும் கையோடு அனுப்புவதை கண்டித்து, போக்குவரத்து ஊழியர்கள், தங்களின் குடும்பத்தோடு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை, போன்றவற்றை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இது, ஓய்வு பெறுவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, சென்னை வடபழனி பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்த அசோகன் 60, நேற்று ஓய்வு பெற்றார்.
அவருக்கு மாலை அணிவித்து, பணியை பாராட்டி நிர்வாகம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அவருக்கு வழங்க வேண்டிய, ஓய்வுகால பலன்கள் எதுவும் வழங்காமல், வெறும் கையோடு அனுப்பினர்.
இதனால், மன வருத்தம் அடைந்த அசோகன், தன் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தினருடன், பணிமனை வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஓய்வு நாளில் அவருக்கு அணிவித்த மாலை மற்றும் பணி நிறைவு சான்றிதழுடன், அவர் போராட்டத்தில் ஈடுபட்டது, அனைவர் மனதிலும் வேதனையை ஏற்படுத்தியது. அவரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
இது குறித்து, அசோகன் கூறியதாவது:
நான் மாநகர போக்குவரத்து கழகத்தில், 31 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு பி.எப்., ஓய்வு கால பலன்கள் என மொத்தம், 35 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும்.
ஆனால், தற்போது ஒரு ரூபாய் கூட அளிக்காமல், வெறும் கையோடு அனுப்புகின்றனர். பணி நிறைவு விழாவுக்கு வந்தவர்களுக்கு, ஒரு டீ கூட வாங்கி கொடுக்க முடியாமல், மன வருத்தத்துடன் செல்கிறேன்.
என்னை போன்று, ஓய்வு பெறுவோர் அனைவரும், இதே வேதனையுடன் தான் செல்கின்றனர். இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
