கோவில் உண்டியலில் காந்தம் நுாதனமாக திருடியவர் கைது

புன்னைநல்லுார்: தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பின், பிப்., 10ல் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பல உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஒரு உண்டியல் முன், இளைஞர் ஒருவர் வெகுநேரமாக நின்று கொண்டிருப்பதை, 'சிசிடிவி' கேமராவில் கோவில் ஊழியர்கள் பார்த்துள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க ஊழியர்கள் சென்றபோது, அந்த இளைஞர் தப்பியோடினார். கோவில் செயல் அலுவலர் மணிகண்டன், தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, காந்தத்தை நுாலில் கட்டி, உண்டியலில் இருந்து நாணயங்களை திருடியது தெரிய வந்தது. கங்காதரபுரம் அய்யப்பன், 24, என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர்.

Advertisement