கொடுக்காப்புளி பறிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி

சிவகாசி: கொடுக்காப்புளி பறிக்க முயன்ற 5 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மத்திய சேனை கிழக்குத் தெருவைச் சேர்ந்த வெள்ளையன். மனைவி மகேஸ்வரி. இருவரும் பட்டாசு தொழிலாளர்கள். இவர்களது மகள் பாண்டி மீனா, மகன்கள் விஜயபிரசாத், பிரவிந், 5. விஜயபிரசாத், 2ம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று முன்தினம், அங்கன்வாடி சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பிரவிந், மாலை விளையாடச் சென்றவர் இரவு வரை வராததால் பெற்றோர் தேடினர்.

அன்றிரவு, 7:00 மணிக்கு சிங்காபுலிராமன் என்பவர் வீட்டு தகர ஷெட்டின் மேல், மின்கம்பியை மிதித்த பிரவிந் மின்சாரம் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

சிங்காபுலிராமன் வீட்டு தகர செட்டின் மீது ஏறி கொடுக்காப்புளி பறிக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து பிரவிந் இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement